

சேலத்தில் பெண் கொலை வழக்கு தொடர்பாக 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாப்பேட்டை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாட்ஷா. இவரது மனைவி உமையபானு (45). இவர் கோட்டை ஈஸ்வரன் கோயில் வணிக வளாகத்தில் துணிக் கடை நடத்தி வந்தார். மேலும் முஸ்லிம் மகளிர் கூட்டுறவு சங்கத்தில் கவுரவச் செயலாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி வீட்டில் உமையபானு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மற்றும் அலைபேசி தொடர்புகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் (45), அப்சல் (28) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.