

சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு குறையாமல் இருப்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் பகல்நேர தேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதியிலும் கடந்த 12-ம் தேதி முதல் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால், வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தை ஆர்வத்துடன் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கோடைவெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் குறையாமல் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. இதனால், பகல் நேரங்களில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைத்துள்ளது. சாலைகளில் அனல் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சேலத்தில் 100.4 டிகிரி, நேற்று 101.9 டிகிரி என வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரிக்கு குறையாமல் உள்ளது. இதனால், வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை பகலில் மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
குறிப்பாக, திறந்த வேனில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமலும், வீதி வீதியாக நடந்து சென்று, மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை அளித்துவாக்கு சேகரிக்க முடியாமல் தவிக்கின்றனர்.பெரும்பாலான வேட்பாளர் கள் பகல் நேர பிரச்சாரத்தை தவிர்த்து வருகின்றனர். அதிகாலை நேரங்களில் காய்கறி சந்தைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.
மாலை நேரத்தில் வீதி வீதியாக வேனில் சென்றும், நடந்து சென்றும் வாக்கு சேகரித்து வருகின்றனர். பகல் நேரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து வருகின்றனர்.