

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில், மாணவர்களுக்கு ஆற்றல் அறிவியல் துறை சார்பில் வேலைவாய்ப்புத் திறன் குறித்த 2 நாள் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சிக்கு, ஆற்றல் அறிவியல் துறை தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். கருத்தரங்கை தொடங்கிவைத்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் குழந்தைவேல் பேசியதாவது:
ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க கல்வி நிறுவனங்களுடன் தொழில் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். பெரியார் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள அதிநவீன வசதிகளை மற்ற கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொறியாளர் கோதண்ட ராமன் பேசும்போது, வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில் எதிர்பார்ப்புகள் தொடர்பாக நேர்காணலின்போது உடல் மொழி, தகவல் தொடர்பு நடைமுறை ஆகியவை தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு இலக்கை நிர்ணயிக்கவும், இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். செயல்பாட்டு அடிப்படையிலான பயிற்சியாளர் கருணாய் பிரகாஷ், மென்திறன் பயிற்சியாளர் பிரதீபா ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
நிறைவில் ஆற்றல் அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார். உதவிப் பேராசிரியர்கள் மாதேஸ்வரன், தங்கப்பன் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கருத்தரங்கு இன்றும் (17-ம் தேதி) நடைபெறுகிறது.