

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணி தொடர்பாக ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
சேலம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் சேலம் வந்தார். ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இதனிடையே, நேற்று காலை முதல்வரை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக வேட்பாளர்கள் நல்லதம்பி, ஜெயசங்கரன், சுந்தரராஜன், சித்ரா, வெங்கடாசலம், பாலசுப்ரமணியன், ராஜமுத்து ஆகியோரும், அதிமுக கூட்டணியில் சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் அருள், மேட்டூர் பாமக வேட்பாளர் சதாசிவம் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர், ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் காலை மற்றும் மாலையில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், முதல்வர் பேசும்போது, “அதிமுக அரசின் குடிமராமத்துத் திட்டம், சேலம் மாநகரில் புதிய மேம்பாலங்கள், தலைவாசல் கால்நடைப் பூங்கா, மேட்டூர் உபரிநீர்த் திட்டம், விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைப்பு உள்ளிட்ட அரசின் சிறப்பான செயல்பாடுகளால், மக்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு முழுமையாக கிடைக்கும்” என்றார்.