

கரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநகராட்சிஅதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை கழுவியும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், விதிகளைக் பின் பற்றாதவர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது தேர்தல் பணியில் இல்லாத அனைத்து அதிகாரிகளையும் சோதனை மற்றும் அபராதம் விதிப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், வெளியில் அதிகம் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முழு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, மக்கள் கைகளில்தான் உள்ளது. எனவே, மக்களும் அரசுத் துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்றனர்.