

‘ஆத்தூர் - நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு, இரண்டு நகராட்சி பகுதிகளுக்கும் நாளை, நாளை மறுநாள் (14-ம் தேதி மற்றும் 15-ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது,’ தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சேலம் பராமரிப்பு கோட்ட நிர்வாகப்பொறியாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சேலம் பராமரிப்பு கோட்ட நிர்வாகப்பொறியாளர் குணசேகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ஆத்தூர்- நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நாளை, நாளை மறுநாள் (14-ம் தேதி மற்றும் 15-ம் தேதி) இரண்டு தினங்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சேலம், அம்மாபேட்டை நீர் உந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணியால், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் இரு நகராட்சிகளுக்கும், அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, ஏத்தாப்பூர் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய நகர பேரூராட்சிகளுக்கும், அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம் மற்றும் ஆத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளும்படியும், மேலும் உள்ளூரில் உள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.