

சேலம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்கள், வணிக நிறுவனங்களுக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
முகக்கவசம் அணியாதவர்கள் கண்டறியப்பட்டால் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு வகையான குழுக்கள் மூலமாகவும் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், தனிமைபடுத்தலுக்கான விதிகளை மீறுவோர், பொது இடங்களில் எச்சில் துப்புவோர், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.