

பாளையங்கோட்டை, நாங்குநேரி தொகுதிகளுக்கு அதிமுகவில் புதுமுக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. திருநெல்வேலி தொகுதி அக் கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அக் கட்சி அறிவித்திருக்கிறது. அதில் பாளையங்கோட்டை, நாங்குநேரி தொகுதிகளுக்கு புதுமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
பாளையங்கோட்டை தொகுதியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலராக உள்ள கே.ஜே.சி. ஜெரால்டு (42) போட்டியிடுகிறார். பாளையங்கோட்டை கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவராக உள்ளார். பி.ஏ., எல்எல்பி படித்து ள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திருநெல்வேலி தச்சநல்லூரை சேர்ந்த இவர், எஸ்எஸ்எல்சி படித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார்.
ராதாபுரம் தொகுதி வேட்பாளரான ஐ.எஸ். இன்பதுரை நவ்வலடியைச் சேர்ந்தவர். பி.ஏ., பிஎல் படித்துள்ள இவர், அதிமுகவில் தற்போது தேர்தல் பிரிவு துணைச் செயலராகவும், சட்டப் பேரவை உறுதிமொழி குழு தலைவராகவும் உள்ளார்.
அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளரான இசக்கிசுப்பையா கடந்த 2011 முதல் 2016 வரை சட்டப் பேரவை உறுப்பினராகவும், மாநில சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கட்சியில் அமைப்புச் செயலராக பொறுப்பு வகிக்கிறார். எம்.ஏ., எம்.எல்., பிஎச்டி படித்துள்ளார்.