சேலம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு - குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு :

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சரிபார்க்கும் தேர்தல் அலுவலர்கள். 		                     படம்: எஸ்.குரு பிரசாத்
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சரிபார்க்கும் தேர்தல் அலுவலர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கு 214 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 11 தொகுதிகளுக்கும் தயார் நிலையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 சதவீதம் கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,142 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,142 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 34 சதவீதம் கூடுதல் ஒதுக்கீட்டில் 5,740 விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் ஒவ்வொரு தொகுதிக்கும் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் காவல்துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கான பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படும். பாதுகாப்பு வைப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தமிழரசன், (தேர்தல்) தியாகராஜன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சிராஜூதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in