வெயில் தாக்கம் அதிகரிப்பால் - மேட்டூர், முட்டல் அருவியில் குவிந்த பயணிகள் :

வெயில் தாக்கம் அதிகரிப்பால் -  மேட்டூர், முட்டல் அருவியில் குவிந்த பயணிகள் :
Updated on
1 min read

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாளான நேற்று ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் அருவி மற்றும் மேட்டூர் அணைப் பூங்காவுக்கு பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.

கோடை தொடங்கிவிட்ட நிலையில், சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சேலத்தில் 101.8 பாரன்ஹீட் டிகிரியாக இருந்த பகல் நேர அதிகபட்ச வெப்பம், நேற்று 101.3 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு குறையாமல் வெயிலின் தாக்கம் இருப்பதால், பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

சேலத்தில் புதிய பேருந்து நிலையம் சாலை, 5 ரோடு, 4 ரோடு, பழைய பேருந்து நிலையம் சாலை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். நேற்று வெயில் அதிகரித்து இருந்ததால், மக்கள் நடமாட்டம் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

இதனிடையே, ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலா தலத்துக்கு மக்கள் குடும்பத்தினருடன் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். அங்குள்ள அருவியில் கொட்டும் குளிர்ச்சியான நீரில் பலரும் நீராடி மகிழ்ந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால், அருவியில் குளிக்க பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். மேலும், அங்குள்ள முட்டல் ஏரியில் பயணிகள் படகு சவாரி சென்றும் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.

இதேபோல், மேட்டூர் அணை பூங்காவிலும் நேற்று பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. மேட்டூர் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பூங்காவுக்கு வந்து பொழுதைக் கழித்து மகிழ்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in