

போளூர் அருகே ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணா மலை மாவட்டம் போளூர் அடுத்த இரும்புலி கிராமத்தில் வசிக்கும் லோகநாதன் என்பவர் அளித்துள்ள மனுவில், “போளூர் அடுத்த பொத்தரை கிராமத்தில் வசிப்பவரும், பெங்களூருவில் வசிப்பவரும், தங்களது பிள்ளை களுக்கு ராணுவத்தில் வேலை வாங்க, தலா ரூ.3 லட்சம் பணம் கட்டி உள்ளதாக, என்னிடம் கூறினர்.
அதேபோல், எனக்கும் வேலை வாங்கி தருவதாக கூறியதால், அவர்களை நம்பி கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.3 லட்சம் கொடுத்துள்ளேன். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை.
இது தொடர்பாக பொத்தரை கிராமத்தில் வசிப்பவரிடம் கேட்டபோது, விரைவில் பணி நியமன கடிதம் வரும் எனக் கூறி வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த நான், அவர்களிடம் வேலை வாங்கி கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கு மாறு வலியுறுத்தினேன்.
இதன் எதிரொலியாக, பொத்தரை கிராமத்தில் இருந்து இரவோடு இரவாக வீட்டை விட்டு குடும்பத்துடன் சென்றுவிட்டார். என்னிடம் பேசிய 2 பேரது செல் போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் பலரை ஏமாற்றி 2 பேரும் பணம் பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.