

சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மின்னணு வீடியோ வாகனத்தை ஆட்சியர் ராமன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்., 6-ம் தேதி நடக்கிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்கள் தேர்தலின்போது தங்களின் வாக்குரிமையை கட்டாயம் செலுத்தும் விதமாக 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையிலும், இளம் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்கும் வகையிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், இந்த வாகனத்தில் விழிப்புணர்வு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சிகள் பொதுமக்களுக்கு திரையிட்டு காட்டப்படுகிறது.
இந்த நவீன மின்னணு வீடியோ வாகனத்தை ஆட்சியர் ராமன் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தமிழரசன், (தேர்தல்கள்) தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.