

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, தொகுதி வாரியாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நாளை ( 7-ம் தேதி) வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
இதன்படி ராசிபுரம் தொகுதியில் நாமகிரிப்பேட்டை மெட்டாலா பாக்கியம் மஹால், ராசிபுரத்தில் அண்ணாசாலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், சேந்தமங்கலம் தொகுதியில் துத்துக்குளம் சரவணா மஹால், எருமப்பட்டி சூரியா திருமண மண்டபம், கொல்லிமலை செம்மேடு ஜி.டி.ஆர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
நாமக்கல் தொகுதியில் பரமத்தி சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபம், புதுச்சத்திரம் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்திலும், பரமத்தி வேலூர் தொகுதியில் பரமத்தி சமுதாயக் கூடம், பொத்தனூர் எம்.ஜி.ஆர் திருமண மண்டபத்திலும், திருச்செங்கோடு தொகுதியில் மல்லசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
அதேபோல், குமாரபாளையம் தொகுதியில் குமாரபாளையம் ஜெ.கே.கே.நடராஜ மண்டபம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு நகராட்சி சமுதாய கூடத்திலும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் பல்வேறு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோர் நேரில் சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.