

சங்ககிரி அருகே மகன், மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். மகள் உயிரிழந்த நிலையில், மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவரது மனைவி பிரியங்கா (23). இவர்களுக்கு கிருத்திக்குமார் (6) என்ற மகனும், மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன்னர் பிரியங்காவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், தம்பி நந்தகுமார் ஆகியோர் சேர்ந்து பார்த்திபனை கொலை செய்தனர். இந்த வழக்கில் சங்ககிரி போலீஸார் 3 பேரையும் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கவேல் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், சரத்குமாரும் ஜாமீனில் வெளியே வர முயன்று வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கவேல், பிரியங்கா வீட்டுக்கு சென்றபோது, வீட்டில் தூக்கில் பிரியங்கா பிணமாக தொங்கினார். மூன்று மாத குழந்தை மற்றும் கிருத்திக்குமாரும் மயங்கி கிடந்தனர். அதிர்ச்சியடைந்த தங்கவேல் அவர்களை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மூன்று மாத குழந்தை விஷம் கொடுக்கப்பட்டதில் இறந்தது தெரிந்தது. கிருத்திக்குமாருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், பிரியங்கா இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.