

திருவண்ணாமலை அருகே மளிகைக்கடை உரிமையாளரை தாக்கி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர் களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தில் மளிகைக்கடை நடத்தி வருபவர் விஜயரங்கன்(65). இவர், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்க திருவண்ணாமலைக்கு நேற்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
திருவண்ணாமலை–மண லூர்பேட்டை சாலையில் கண்ணமடையான் வனப்பகுதி அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3 பேர் விஜயரங்கனின் வாகனம் மீது மோதினர். இதனால், அவர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த 3 பேர், விஜயரங்கனை இரும்பு கம்பியால் தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கினர். பின்னர், விஜயரங்கனிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த விஜயரங்கன், தானாகவே இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தில் விஜயரங்கன் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோந்து செல்வதில்லை
காவல் துறையினர் ரோந்து செல்வது கிடையாது. மாலை நேரத்தில் மட்டும், தலைக்கவசம் இல்லாமல் செல்பவர்கள், உரிமம் இல்லாதவர்களை பிடித்து அபராதம் வசூலிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடு பவர்களை கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் முன் வர வேண்டும்” என்றனர்.