

கடந்த 2006-ம் ஆண்டுக்கு முந்தைய வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட 5,027 இயந்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சேலம் ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் ஜனவரி 25-ம் தேதிவரை முதல்நிலை சரிபார்ப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டன.
அப்பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு தயார் நிலையில் 7,460 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,479 கட்டுப்பாட்டுக் கருவிகள், 5,970 விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன் படுத்துவது தொடர்பாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் 5 சதவீதம் மின்னணு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கும் மொத்தம் 214 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 214 வாக்குப்பதிவு இயந்திரங்களும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், கடந்த 2006-ம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப் பட்ட எம்.1 வாக்குப்பதிவு இயந்திரங்களை சென்னையில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 2708 எம்.1 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2319 எம்.1 கட்டுப்பாட்டுக் கருவிகள் என 5,027 இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன், 11 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாக்களிக்க பயிற்சி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கும் தலா 17 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வீதமும், பரமத்தி வேலூர் தொகுதிக்கு 15 என மொத்தம் 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபேட் கருவி ஆகியவை செயல்முறை விளக்கம் அளிப்பதற்காக அனுப்பப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சி.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மு.கோட்டைக்குமார், ப.மணிராஜ் உள்பட அரசியல் கட்சியினர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.