

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 7,24,484 ஆண் வாக்காளர்கள், 7,57,151 பெண் வாக்காளர்கள், 164 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,81,799 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2016-2017, 2017-2018-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித் தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்கள் வாக்காளர்களாக சேர்ந்து உள்ளார்களா என்பது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விசாரித்து, அவர்களை வாக்காளர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வந்தவர்களையும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேட்புமனுதாக்கல் கடைசிநாள் வரை இப்பணிகள் நடைபெறும்.
மாவட்டத்தில் 1,603 வாக்குச் சாவடிகள் உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக 1,050-க்கும் அதிகமாக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக 494 துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் உள்ளன.
மாற்றுத்திறனாளிகள் பிடபிள்யூடி செயலி மூலம் தெரிவித்தால், அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 11 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
மாவட்டத்தில் 242 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 10,604 பணியாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 2,719 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,644 வாக்குச்சீட்டு பொருத்தும் இயந்திரங்கள், 2,922 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் கட்சியினருக்கு நடத்தை விதிகள் குறித்து விளக்கி கூறப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சுவர்களில் கட்சி விளம்பரங்களை அகற்றுவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களில் கட்சி விளம்பரங்கள் இருந்தால், அதனை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால், அவர்களைப் பிடித்து விசாரணை நடத்த அறிவுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மற்றும் விளம்பரங்கள் வைப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1950 என்ற எண் மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். சீவிஜில் செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.