

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பொதுத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம், ஆட்சியர் சமீரன் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 15 பறக்கும்படைகள், 15 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 10 இதர குழுக்கள் என மொத்தம் 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் புகார்கள் குறித்து 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சங்கரன்கோவில் (தனி) தொகுதி - சங்கரன்கோவில் கோட்டாட்சியர், வாசுதேவநல்லூர் (தனி) - மாவட்ட வழங்கல் அலுவலர், கடையநல்லூர் - தென்காசி சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர், தென்காசி - தென்காசி கோட்டாட்சியர், ஆலங்குளம் - தென்காசி கலால் உதவி ஆணையர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 3,231 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2404 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,534 விவி பாட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சங்கரன்கோவில் தொகுதியில் 365 வாக்குச்சாவடிகள், வாசுதேவநல்லூர் 336, கடையநல்லூர் 411, தென்காசி 408 மற்றும் ஆலங்குளம் தொகுதியில் 364 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் தொகுதியில் 2,52,939 வாக்காளர்கள், வாசுதேவநல்லூர் 2,40,367, கடையநல்லூர் 2,88,909, தென்காசி 2,91,524, ஆலங்குளம் 2,60,141 என மொத்தம் 13,33,880 வாக்காளர்கள் உள்ளனர் என்று ஆட்சியர் கூறினார்.