Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 2-ம் நாளாக 90 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை தற்காலிக ஓட்டுநர்களால் விபத்து: பயணிகள் ஆர்ப்பாட்டம்

அரசுப் பேருந்துகள் இயங்காததால் உளுந்தூர்பேட்டையில் தனியார் பேருந்து கூரை மீது பயணம் செய்யும் பயணிகள்.

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று 2-ம்நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கரபுரம் பணிமனைகளில் 90 சதவீதம் அரசு பேருந்துகள் இயங்கவில்லை.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக கடலூர் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொமுச மண்டல செயலாளர் தங்க.ஆனந்தன் தலைமையில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோன்று விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் பணிமனைகள் முன்பும்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தற்காலிகஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி நேற்று கள்ளக் குறிச்சி பணிமனையில் இருந்து சென்னைக்கு தற்காலிக ஓட்டுநரைக் கொண்டு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே, தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார்பேருந்தில் பயணித்த 5 பேர்காயமடைந்தனர். இதற்கிடையே அரசுப் பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் அங்கிருந்துதப்பியோடி விட்டார். அரசு பேருந்தில் வந்த பயணிகள் தங்களுக்கு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் மாற்று பேருந்து ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பயணிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

அரசுப் பேருந்துகள் இயங் காததால் பயணிகள் பலர் தனியார் பேருந்துகளின் மேற்கூரைகளில் ஏறி பயணம் செய்த சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று 2-வது நாளாக பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனால் விழுப்புரம், செஞ்சி, மேல் மலையனூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ளஅனைத்து பேருந்து நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. தனியார் பேருந்துகள் வழக்கத்திற்கும் மாறாக அதிகளவில் இயக்கப்பட்டன. அந்த பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x