

சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைக்கும் சட்ட தன்னார்வ தொண்டர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்டத்தில் இயங்கும் மேட்டூர், சங்ககிரி, ஓமலூர், ஆத்தூர் வட்ட சட்டப் பணிகள் குழுக்களுக்கும், சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைக்க 50 சட்ட தன்னார்வலர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
இதற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமகன், எம்.எஸ்.டபிள்யூ. பயிலும் மாணவர்கள், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் வரை), சமூக ஆர்வலர்கள் (அரசியல் சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்), மகளிர் குழுவினர், சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்கள், நீண்டகால தண்டனை பெற்று, சிறையில் படித்த சிறைவாசிகள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள், https://districts.ecourts.gov.in/salem என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மார்ச் 4-ம் தேதிக்குள் பதிவு தபால் மூலம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு, சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களை அணுகலாம்.