சீருடையில் பொருத்த நவீன கேமரா நெல்லை போலீஸாருக்கு வழங்கல்
திருநெல்வேலி மாநகரில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரின் சீருடையில் பொருத்தி, கண்காணிப்பில் ஈடுபட உதவியாக நவீன கேமராக்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் சீனிவாசன் இவற்றை போலீஸாருக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
திருநெல்வேலியில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார், வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸார் 33 பேருக்கு இத்தகைய நவீன கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள், பின்னாளில் பல்வேறு விசாரணைகளுக்கு உதவும். குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கவும் இவை பயனுள்ளதாக இருக்கும். இந்த கேமராக்களில் வீடியோ, ஆடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது என்று தெரிவித்தார். மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் மகேஷ்குமார், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மானூர், நாங்குநேரி, களக்காடு, சுத்தமல்லி, வள்ளியூர் ஆகிய, 5 போலீஸ் நிலையங்களுக்கு தலா 3 கேமராக்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
