Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

பிராஞ்சேரி குளத்தின் கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் விஷ்ணு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர்.

திருநெல்வேலி, பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில்,‘பேட்டை, எம்ஜிஆர் நகர், தங்கம்மன்கோயில் தெரு பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏராளமானோர் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம். எங்கள் குடியிருப்புகள் மழை நீரால்பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்காக உதவியோ, மாற்று இடமோகேட்கவில்லை. எங்களை வேறுஇடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்காமல் அங்கேயே தொடர்ந்து குடியிருக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி செயலாளர் தேவேந்திரன் அளித்துள்ள மனுவில், ‘நாங்குநேரி வட்டத்தில் பஞ்சமி நிலம் 12.50 ஏக்கர் உள்ளது. அதனை மாவட்ட நிர்வாகம் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் சட்டப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலங்களை பட்டியலின மக்கள் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

பிராஞ்சேரி பகுதி விவசாயிகளுடன் தமிழ் விவசாயிகள் சங்கதலைவர் நாராயணன் அளித்துள்ள மனுவில், ‘மானூர் வட்டம்,பிராஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசன்குளம் கரையை தனியார் கிரஷர் அமைப்பதற்காக கடந்த சிலநாட்களுக்கு முன்பு சேதப்படுத்திவிட்டனர். இதை தட்டிக் கேட்ட விவசாயிகளை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்கள். இங்குகிரஷர் அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, கிரஷர்அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கரையை சேதப்படுத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

திம்மராஜபுரம், அண்ணாநகரைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் இடத்துக்குபட்டா கேட்டு மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x