Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

மதுரை

திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம்-கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.33.47 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:

இங்கு மேம்பாலம் கட்டப்படும் என கடந்த 2015-ல் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் சட்டப் பேரவையில் அறிவித்தார். நில எடுப்பு சம்பந்தமாக பல சிரமங்கள் இருந்தன. மக்களின் நிலத்தைப் பறிக்காமல் வரைபடம் உருவாக்கி ஒப்புதல் பெறப்பட்டது. தற்போதுரூ. 33.47 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தால் அனுமதி பெறத் தாமதமானது. இது தென்மாவட்ட மக்களின் மிகப் பெரிய வரப்பிரசாதம்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் கடன் அளிக்க ஒப்புதல் கொடுத்துள்ளது. சிலர் புத்திசாலித்தனமாகக் கேட்கிறோம் என நினைத்து, மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வந்துவிட்டதாகப் பேசுகிறார்கள்.

ஜெய்க்கா நிறுவனம்தான் மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனைகளுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி உள்ளது. இந்த கடனை கட்ட 40 ஆண்டு கால அவகாசம் கொடுத்துள்ளது. இதில் முதல் 10 ஆண்டுகள் கடன் கட்டத் தேவை இல்லை என்ற சலுகையை இந்த நிறுவனம் வழங்கியது. இதனால்தான் இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலம் தொகுதி முழுவதும் சாலை, குடிநீர் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கேந்திரா தேவி, கண்ணன், முனீஸ்வரன், உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x