

கிராம மக்களின் தேவை அறிந்து தேவையான உதவிகளை வங்கிகள் சிறப்பாக செய்ய வேண்டும்,’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நிதி சார் கல்வி மற்றும் கடன் இணைப்பு குறித்த வங்கியாளர்களுக்கான புரிந்துணர்வு பயிற்சியை ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வங்கியாளர்களுக்கான ஒரு நாள் கருத்துப்பட்டறையின் முக்கிய நோக்கம் கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மக்கள் வங்கிக்கடன் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். இப்பயிற்சியில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்கள் வங்கிகளில் எளிதில் கடனுதவிகள் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளது. அனைத்து வங்கிகளும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட கடன் உதவிகள் மற்றும் கல்விக்கடன் வழங்க வேண்டும்.
இக்கடனுதவி மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம் மேம்படும் மற்றும் அனைத்து சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி அடைய முடியும். எனவே, கிராம மக்களின் தேவை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வங்கிகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் ஆட்சியர் ராமன் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகத்தினை வெளியிட்டு 18 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.82.79 லட்சம் கடனுதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.