

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நாளை(பிப்.21) நடைபெறும் காவிரி- குண்டாறு இணைப்பு திட்ட தொடக்க விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட தொடக்க விழா பிப்.21-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி, கால்வாய் வெட்டும் பணியை தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக புதுக்கோட்டை வரும் முதல்வர் பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்துக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இக்கால்வாய் பணிகள் முடிவடைந்தவுடன் விநாடிக்கு 6,360 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 43,000 ஏக்கரில் பாசனத்துக்கு உத்தரவாதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.