

பெரம்பலூர் மாவட்டம் எசனை கீழக்கரையைச் சேர்ந்தவர் தமிழரசு மனைவி கவிதா (41). கீழக்கரை ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக உள்ள இவர், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் கடன் பெற்று, மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தாததால், நிதி நிறுவன ஊழியர் நேற்று கவிதா வீட்டுக்குச் சென்று, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய முயன்றாராம்.
இதையடுத்து நிதி நிறுவனத்துக்குச் சென்று புகார் தெரிவித்துவிட்டு, வெளியே வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனராம். அந்த வாகனத்தில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துத் தர வேண்டும் எனக் கேட்டதற்கு ஊழியர்கள் மறுத்து விட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த தனது நகை, பணத்தை மீட்டுத் தரக் கோரி, அந்த நிதி நிறுவனத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீஸார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.