சங்கரன்கோவிலில் ரூ.6.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர்

சங்கரன்கோவிலில் ரூ.6.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர்
Updated on
1 min read

சங்கரன்கோவிலில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் சங்கரன்கோவிலில் புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. திருவேங்கடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் எலுமிச்சை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை மூலம் பல்வேறு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்துக்கு ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. இந்த பகுதிக்கு 2 மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பல திட்டங்கள் இந்த தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டுவந்து, 435 பேர் மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை அதிமுக அரசு உருவாக்கித் தந்தது ” என்றார்.

முன்னதாக புளியங்குடியில் மகளிர் குழு வினருடன் முதல்வர் கலந்துரையாடினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.எம்.ராமலெட்சுமி, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், வாசுதேவநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அ.மனோகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in