அமமுகவை பொறுத்தவரை திமுகதான் எங்களது நிரந்தர எதிரி நாமக்கல்லில் டிடிவி.தினகரன் உறுதி

அமமுகவை பொறுத்தவரை திமுகதான் எங்களது நிரந்தர எதிரி நாமக்கல்லில் டிடிவி.தினகரன் உறுதி
Updated on
1 min read

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்குப் பின்னர் அமமுக எழுச்சி பெறும். அதன் பின்பு நடப்பதை பாருங்கள் என நாமக்கல்லில் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் அமமுக துணைத் தலைவர் அன்பழகன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதாவால் தீய சக்தி என அழைக்கப்பட்ட திமுகவை, ஆட்சிக்கு வரவிடக் கூடாது. வரவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மட்டுமே அமமுகவினர் உள்ளதாக அமைச்சர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால் சசிகலா விடுதலையாகி வெளியே வந்தபோது தமிழகம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர். சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பினர். அதுமட்டுமின்றி சசிகலா வருகைக்காக ரூ.192 கோடி, ரூ. 200 கோடி செலவழித்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பினர்.

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் உள்ளதால் அவ்வாறு பேசி வருகின்றனர். திமுகவும், அதிமுகவும் 60 சதவீதம், 40 சதவீதம் என்ற கமிஷன் அடிப்படையில் கைகோர்த்துக் கொண்டு உள்ளனர். அமமுக ஆட்சியமைக்க பாடுபடுவதும், அக்கட்சியை மீட்டெடுப்பதும் நமது லட்சியமாகும். ஆர்கே நகர் வெற்றி போல் போல் தமிழகம் முழுவதும் அமமுக வெற்றி பெறும்.

வரும் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளுக்குப் பின் அமமுக எழுச்சி பெறும். அதன் பின் நடப்பதை பாருங்கள். திமுகவின் பொய்யான வழக்குகளால் சசிகலா சிறை சென்று வந்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். கரோனா பரவல் காரணமாகவே சில காலம் ஒதுங்கி இருந்தேன். அதற்குள் தினகரன் பயந்துவிட்டார் எனக் கூறினர். நான் யாருக்கும் பயந்தவன் அல்ல. சட்டப்பேரவைத் தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும், என்றார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமமுகவை பொறுத்தவரை திமுகதான் எங்களது நிரந்தர எதிரி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியா என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரிவிக்கிறோம். சசிகலா தற்போது ஓய்வில் உள்ளார். ஓய்வுக்குப் பின்பு அவரது அரசியல் வருகை குறித்து அவரே நேரடியாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார்.

விருப்ப மனுக்களை வாங்குவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அமமுக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in