ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்பி கனிமொழி பேசினார்.
ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்பி கனிமொழி பேசினார்.

உதய் மின்திட்டத்தால்இலவச மின்சாரம் பாதிக்கும் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

Published on

மத்திய அரசு கொண்டுவந்துள்ள உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளதால் இலவச மின்சார திட்டம் பாதிக்கப்படும், என திமுக எம்பி கனிமொழி பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக திமுக மாநில மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது குருசாமிபாளையத்தில் நெசவாளர்களை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார். இதில் கனிமொழி எம்பி பேசியதாவது:

நூல்களின் விலை ஏற்ற இறக்கத்தால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் நூல் விலை ஏறாமல் மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்படும். நெசவாளர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்ய ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

நெசவாளர்களுக்கு நல வாரியம் உருவாக்கித் தரப்படும். விசைத்தறி தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற கூலி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்படும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளதால் இலவச மின்சாரம் பாதிக்கப்படும்.

விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்க இது போன்ற குறைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் களைவோம், என்றார்.

நிகழ்ச்சியில்நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in