Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM

பச்சிளங்குழந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த மாதம் 16-ம் தேதி ராமு மனைவி ரம்யா(27)வுக்கு 2.7 கிலோ எடையுடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த 2 நாட்களுக்கு பிறகு ரத்தம் கலந்து வாந்தி, பேதி ஏற்பட்டதோடு, சுவாச கோளாறும் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு குழந்தை மாற்றப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், குழந்தையின் நுரையீரலிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைக்கு வென்ட்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.

ரத்தக் கசிவை சரி செய்ய 5 முறை ரத்த சிவப்பணுக்கள் , ரத்த தட்டணுக்கள் மற்றும் பிளாஸ்மா செலுத்தப்பட்டது. பின்னர், குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் குழந்தையின் சிறுநீரகம் செயலிழந்து உப்பு சத்து மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், மருத்துவ கல்லூரியின் முதல்வர் எம்.பூவதி ஆலோசனையின்படி குழந்தையின் வயிற்றில் குழாய் செலுத்தப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2 நாட்கள் நடைபெற்ற டயாலிசிஸ் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உப்புசத்து மற்றும் சுவாசம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

பின்னர், செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு, குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது.

கிருமித்தொற்றுக்கான ஆன்டிபயாடிக் சிகிச்சை வழங்கப்பட்டது. 25 நாட்கள் சிகிச்சையில் குழந்தை உடல் நலம் தேறிய பின்பு நேற்று முன்தினம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய மருத்துவர்களை முதல்வர் பூவதி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x