

முத்தரையருக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் அம்பலத்தரசு என்கிற பெ.ராமலிங்கம் தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது.
முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பி.வெள்ளைச்சாமி, மாநில துணைத் தலைவர்கள் எம்.எம்.கருப்பையா, வி.பி.ரவிக்குமார், மாநில அமைப்புச் செயலாளர் பு.சி.தமிழரசன் ஆகியோர் பேசினர். குளித்தலை இளங்கோவன் வரவேற்றார். கரூர் மாவட்டச் செயலாளர் பொய்யாமணி சேகர் நன்றி கூறினார்.
இதில், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், இதுவரை முத்தரையர்களுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்படவில்லை. எனவே, வருங்காலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களில் முத்தரையர் ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.