

சேலம் 5 ரோடு பகுதியில் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, போக்குவரத்து விதிமீறிய 27,139 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் 5 ரோடு பகுதியில் போக்குவரத்து விதிமுறையை வாகன ஓட்டிகள் முறையாக கடைப்பிடிப்பதை கண்காணிக்க ஏஎன்பிஆர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விதிமீறி செல்லும் வாகனங்கள் கேமராவில் புகைப்படம் எடுத்து வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கும் நடைமுறையை மாநகர காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 13 ஆயிரத்து 362 பேர் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் 600 பேர் மட்டுமே அபராதத் தொகை செலுத்தியுள்ளனர். கடந்த ஜனவரியில் தலைக்கவசம் அணியாமல் 13 ஆயிரத்து 777 பேர் சென்றது கண்டு பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களில் 27 ஆயிரத்து 139 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை செலுத்த தவறுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளின்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, வழக்குப் பதிவு செய்யப்பட்ட வாகன ஓட்டிகள் உரிய அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என சேலம் மாநகர போக்குவரத்து காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.