தேர்தலுக்காக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார் பாஜக துணைத் தலைவர் குற்றச்சாட்டு

தேர்தலுக்காக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார் பாஜக துணைத் தலைவர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

எம்ஜிஆரின் ரசிகன் எனக்கூறி தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் பிரச்சாரம் செய்வது தொடர்பாக சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு, மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, முன்னாள் தலைவர்கள் கோபிநாத், அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு, பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி தலைமை வகித்து பேசினார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் துரைசாமி கூறியதாவது:

தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தன்னை எம்ஜிஆரின் ரசிகன் என்றுகூறிக் கொண்டு, அவரது பாடல்களை பாடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆனால், அவர் எம்ஜிஆரின் நினைவிடத்துக்குச் சென்று ஒருமுறை கூட அஞ்சலி செலுத்தியதில்லை. வரப்போகும் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, அவர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சசிகலாவின் வருகை அதிமுக-வின் உட்கட்சி விவகாரம். அது பற்றி கருத்துகூற முடியாது. பிற மதத்தினரைப் பற்றி தவறாக பேசுவதை பாஜக ஊக்கப்படுத்துவதில்லை. அதே நேரத்தில், இந்துக்களை மற்ற மதத்தினர் இழிவாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in