

சேலத்தில் அரசு முத்திரையுடன் காரில் வலம் வந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி பி.நாட்டாமங்கலம் பகுதியில் ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலை சிறப்பு வருவாய் அலுவலர் எனக் கூறிய ஒருவர் பட்டா, பத்திர பதிவு செய்தல், முத்திரை தாள் உரிமம் பெறுதல் உள்ளிட்ட வேலை செய்து தருவதாக மக்களிடம் கூறி, பணம் பெற்று வந்துள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், நேற்று முன் தினம் மாலை கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கு தமிழக அரசு முத்திரையுடன் காரில் வந்த அந்த நபர், ஈரோடு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு வருவாய் அலுவலராக பணியாற்றி வருவதாக போலீஸாரிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அவரின் இரண்டு சக்கர வாகனம் திருடு போய் விட்டதாகவும், அதில் முக்கிய ஆவணங்கள், காசோலை உள்ளிட்டவை இருந்ததாக போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அவரின் நடவடிக்கையால் போலீஸார் சந்தேகம் அடைந்து, அரசு துறையில் பணியாற்றுபவரா என விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில், சேலம், பி.நாட்டாமங்கலத்தை சேர்ந்த மூர்த்தி (30) என்பதும், பிகாம் வரை படித்துவிட்டு, போலியாக ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலை சிறப்பு வருவாய் அலுவலராக பணியாற்றுவதாக மக்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மூர்த்தியை கைது செய்த போலீஸார், தமிழக அரசு முத்திரையை பறிமுதல் செய்தனர்.