சேலம் அரசு மருத்துவமனையில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கான கரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. இதில் ஆட்சியர் ராமன் முதல்கட்டமாக தடுப்பூசியை போட்டுக்கொண்டார். படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம் அரசு மருத்துவமனையில் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கான கரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. இதில் ஆட்சியர் ராமன் முதல்கட்டமாக தடுப்பூசியை போட்டுக்கொண்டார். படம்: எஸ்.குரு பிரசாத்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சேலம் ஆட்சியர் இதுவரை 10,747 பேருக்கு தடுப்பூசி

Published on

சேலம் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களைக் தொடர்ந்து, வருவாய் மற்றும் காவல்துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் ஆட்சியர் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதுவரை 10,747 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக, 52,800 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெறப்பட்டு, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் என 26,318 பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, வருவாய் துறையில் 1,384 பேர்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ராமன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும், கோட்டாட்சியர் மாறன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதா பிரியா உள்ளிட்ட பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் செல்வக்குமார், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் கூறும்போது, “சேலம் மாவட்டத்தில் தற்போது வரை 10,747 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது வருவாய்த் துறையில் 1,384 பேருக்கும், காவல்துறையில் 1,684 பேருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும, 20 தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in