ஆவணமின்றி 80 கிலோ வெள்ளிப் பொருட்கள்நகை வியாபாரிக்கு ரூ.3.45 லட்சம் அபராதம்

ஆவணமின்றி 80 கிலோ வெள்ளிப் பொருட்கள்நகை வியாபாரிக்கு ரூ.3.45 லட்சம் அபராதம்
Updated on
1 min read

சேலத்தில் இருந்து ஆந்திராவுக்கு உரிய ஆவணமின்றி 80 கிலோ வெள்ளிப் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றவருக்கு ரூ.3.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அபிலேஷ், சந்திரமோகன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஐந்தாவது நடைமேடை கழிவறை அருகே 5 பைகளுடன் ஒருவர் இருந்தார்.

ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பையை திறந்து பார்த்தனர். அதில், வெள்ளி கொலுசு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் இருந்தது. விசாரணையில், பை வைத்திருந்தவர் வெள்ளிப் பொருட்களுக்கு ஆவணங்கள் ஏதுவும் இல்லாமல் வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, பையில் இருந்த ரூ.57.60 லட்சம் மதிப்புள்ள 80 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்து ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில், வெள்ளிப் பொருட்களை வைத்திருந்தவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை கபிலர் தெருவைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி செந்தில்குமார் (29) என்பதும், ஆந்திரா செல்லும் கோரக்பூர் விரைவு ரயிலில் வெள்ளிப் பொருட்களை எடுத்துச் செல்ல காத்திருந்ததும் தெரிந்தது.

மேலும், இதுதொடர்பாக மாநில வரித்துறை அதிகாரி ரவிக்குமார், வெள்ளி பொருட்களை பரிசோதனை செய்து, ஆவணமின்றி வெள்ளிப் பொருட்களை எடுத்து செல்ல முயன்ற செந்தில்குமாருக்கு ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in