

தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட் டில் உள்ள 6 ரயில்வே கோட்டங் களில் சேலம் ரயில்வே கோட்டம் சரக்கு மற்றும் பார்சல் சேவையில் முன்னணியில் உள்ளது. இந்நிலை யில், பார்சல்களை அனுப்ப 3 விரைவு பார்சல் ரயில்களை இயக்கி, தெற்கு ரயில்வே மண்டலத்தில் சேலம் கோட்டம் முதல் இடம் பெற்றுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
சேலம் ரயில்வே கோட்டம் 3 வழித்தடங்களில் 3 விரைவு பார்சல் ரயில்களை 6 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்க தொடங்கியுள்ளது. முதலாவதாக, 2,632 கிமீ கோவை- பட்டேல் நகர் (டெல்லி) இதன் ஒப்பந்தத் தொகை ரூ.52.19 கோடிக்கு இயக்கப்படுகிறது. இரண்டாவது விரைவு பார்சல் ரயில் கோவை- ராஜ்கோட் (2,243 கிமீ) ஒப்பந்த தொகை ரூ.46.81 கோடிக்கும், 3-வது விரைவு பார்சல் ரயில் வஞ்சிபாளையம் (திருப்பூர்)- நியூ கவுகாத்தி சென்ட்ரல் (3,313 கிமீ) ஒப்பந்தத் தொகை ரூ.66.62 கோடிக்கும் விரைவு பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வே மண்டல கட்டுப்பாட்டில் உள்ள 6 ரயில்வே கோட்டங்களில் சேலம் ரயில்வே கோட்டம் சரக்கு மற்றும் பார்சல் சேவையில் முன்னணியில் உள்ளது. மேலும், பார்சல்களை அனுப்ப 3 விரைவு பார்சல் ரயில்களை இயக்கி, தெற்கு ரயில்வே மண்டலத்தில் சேலம் கோட்டம் முதல் இடம் பெற்றுள்ளது.
ஊரடங்கு காலத்தில் சாலை வழி சரக்குப் போக்குவரத்து பெருமளவு முடங்கிய நிலையில், சேலம் ரயில்வே கோட்டம் பல்வேறு சரக்குகளை ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்த்தது. சேலத்தில் இருந்து அசாமின் திமாபூரில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் ரூ.1.05 வருவாய் ஈட்டியுள்ளது.
சேலம் கோட்டத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு 20 பார்சல் பெட்டிகள் உள்ளிட்டவற்றில் பருத்தி விதைகளை கொண்டு சேர்த்து, ரூ.1.10 கோடி வருவாய் ஈட்டியது.
மேலும், கரூர்- குர்தா ரோடு (ஒடிசா) வரை பார்சல் ரயில் மூலம் கொசு வலைகளை கொண்டு சேர்த்து, ரூ.42 லட்சம் வருவாயை ஈட்டியுள்ளது. நாளொன்று ஒரு பார்சல் பெட்டி என்ற இலக்கை நிர்ணயித்து, 374 பார்சல் பெட்டிகளை இயக்கி, மொத்தம் ரூ.5.38 கோடி வருவாயை சேலம் கோட்டம் சாதனைப் படைத்துள்ளது.
சரக்கு போக்குவரத்து வருவாயில், அக்டோபரில் 59.55 சதவீதம், நவம்பரில் 69.32 சதவீதம், டிசம்பரில் 55.17 சதவீதம் வளர்ச்சி வளர்ச்சியடைந்து, ஒட்டுமொத்தமாக சரக்குப் போக்குவரத்தில் 4.27 சதவீதம் வளர்ச்சியை சேலம் ரயில்வே கோட்டம் அடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல்- டிசம்பர் வரை சிமென்ட் மூட்டைகளை அனுப்புவதன் மூலம் 29.29 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்து, அதில் ரூ.20.85 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதேபோல, இரும்புப் பொருட்கள் அனுப்புவதில் ரூ.15.03 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்து, அதில் ரூ.13.54 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. ஒட்டுமொத்தமாக, 174.82 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் ரூ.150.75 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.