

மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் சொட்டு நீர்ப் பாசன தொகுப்பு சேலம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தோட்டக்கலைத் துறை சார்பில் மானிய விலையில், மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. இதில், செடி வளர்ப்பு பைகள்- 6,விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக் கோடெர்மா, ஆசாடிரக்டின் மற்றும் விளக்கப் பதிவேடு ஆகியவை கொண்ட தொகுப்பு மானிய விலையில் ரூ.510-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், மாடித் தோட்டத்துக் கான சொட்டுநீர்ப் பாசன தொகுப்பும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் யமுனா கூறியதாவது:
மாடித்தோட்ட சொட்டு நீர்ப் பாசன தொகுப்பை பயன்படுத்தி அதிகபட்சம் 60 பைகளில் உள்ள செடிகளுக்கு நீர்ப்பாசனம் அளிக்க முடியும். டிரிப்பர் 52, 25 மீட்டர் மைக்ரோ டியூப், வால்வ் கனெக்டர், செயல்முறை விளக்கக் குறிப்பு உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பின் விலை ரூ.720 ஆகும். ஆதார்கார்டு நகல், புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து ஒருவர் அதிகபட்சம் 2 தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.
இத்தொகுப்பு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 0427- 2280956, 86808 68096 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.