

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதைக் கணக்கிடும் வகையிலும், காப்பீடு பெறுவதற்கும் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் தொடர் மழையால் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தின் ஜனவரி மாத சராசரி மழையளவு 48.5 மி.மீ, ஆனால் இந்தாண்டு மட்டும் 247.3 மி.மீ மழை பதிவானது. இதன் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 79,210 ஹெக்டர் நெற்பயிர்களும், 4569 ஹெக்டர் சிறுதானியப் பயிர்களும், 3030 ஹெக்டர் பயறு வகைகளும், 1079 எண்ணெய் வித்துப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையில் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராமங்களில் வருவாய், வேளாண்துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இப்பணிகளை ஆட்சியர் கள ஆய்வு செய்தார். போகலூர் வட்டம், எட்டிவயல் கிராமத்தில் பயிர் அறுவடை பரிசோதனைத் திடலை ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது அவரே நெல் அறுவடை செய்து மகசூலை ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.எஸ். சேக் அப்துல்லா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.