

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை மாற்றப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் மரபணுச் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்து வமனை டீன் எம்.அல்லி தெரிவித்தார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள சக்கரக்கோட்டையைச் சேர்ந்தவர் என்.மைனர்(33). ஆம்புலன்ஸ் ஓட்டு நரான இவருக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி நாகலட்சுமி மூன்றாவது முறையாக கர்ப்பமானார்.
பிரசவத்துக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி நாகலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 18-ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களிடம் பெண் குழந்தைதான் பிறந்தது என செவிலியர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்த பின் மனைவி, பெண் குழந் தையை வீட்டுக்கு மைனர் அழை த்துச் சென்றுவிட்டார். இந்நிலையில், அவரது வீட்டு முகவரிக்கு அனுப்புநர் பெயர் குறிப்பிடப்படாமல் வந்த கடிதத்தில், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், அதை மாற்றி பெண் குழந்தையை செவிலியர்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்த மைனர், தனது குழந்தை மாற்றப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் மரபணுச் சோதனைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனு அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அரசு மருத்துவமனை டீன் எம்.அல்லிக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி இருந்தார்.
இப்பிரச்சினை குறித்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை டீன் எம்.அல்லி யிடம் கேட்டபோது, குழந்தை மாற்றப் பட்டதாக எழுந்த பிரச்சினையில் நீதிமன்ற அனுமதி பெற்று மரபணு பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி, அதன் அறிக் கையை ஆட்சியருக்கும், சுகாதாரத் துறைக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்றார்.