

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நூல் விலை உயர்வைக் கண்டித்து தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சுமார் 4,000 விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 27-ம் தேதி முதல் ஒரு வார வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில், சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஏராளமான நெசவாளர்கள் தென்காசிக்கு நேற்று வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சங்கத்தின் தலைவர் என்கேஎஸ்டி.சுப்பிரமணியன், செயலாளர் டி.எஸ்.ஏ.சுப்பிர மணியன் ஆகியோர் அளித்துள்ள மனுவில், ‘சங்கரன்கோவிலில் உள்ள 4 ஆயிரம் விசைத்தறிகளை நம்பி சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
மில்களின் தன்னிச்சையான முடிவால் நூல் விலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் உயர்ந்து தற்போது ஒரு கட்டு நூல் ரூ.390 ஆக அதிகரித்துள்ளது.
நூல் விலை உயர்வால் சேலைகளின் விலையை ரூ.45 உயர்த்தியாக வேண்டும். ஏற்கெனவே ஜிஎஸ்டி, கரோனா தாக்கம் ஆகியவற்றால் வியாபாரம் குறைந்துவிட்டது. விலையை உயர்த்தினால் தொழில் மேலும் பாதிப்படைந்து கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
எனவே, நூல் விலை உயர்வு விஷயத்தில் அரசு தலையிட வேண்டும். நூல் ஏற்றுமதி செய்வதை தடுக்க வேண்டும். நெல், கரும்பு போன்றவற்றுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்வது போன்று, நூலுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நூல் மில், நூல் உபயோகிப்போர் மற்றும் அரசு தரப்பினரைக் கொண்டு கட்டுப்பாட்டுக் குழு அமைத்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.