

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. சுவாமியும், அம்மனும் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித் தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தை தெப்பத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 12-ம் நாளான நேற்று தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, அம்மனும், சுவாமியும் வெள்ளி சிம்மாசனங்களில் நேற்று காலை 5 மணி அளவில் கோயிலில் இருந்து புறப்பாடாகி நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து அம்மன் சன்னதி தெரு, கீழமாசி வீதி, காமராசர் சாலை வழியே தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலைச் சென்றடைந்தனர்.
பின்னர் காலை 10.35 மணிக்குமேல் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர்.
பின்னர் பக்தர்கள் தெப்பத்தை வடம்பிடித்து இழுத்தனர். இருமுறை தெப்பக்குளத்தில் வலம் வந்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் 5 மணியளவில் மைய மண்டபத்தில் பத்தி உலாத்துதல் நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணி அளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மனும், சுவாமியும் வலம் வந்தனர்.
பின் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி இரவு 10 மணி அளவில் கோயிலுக்கு திரும்பினர்.
இத்திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டன.