

சேலம்: சேலம் வஉசி பூ மார்க்கெட் உள்ளிட்ட 3 இடங்களில்,
நீதிமன்ற உத்தரவு அறிவிப்புப் பலகையை வைத்து, கடை வாடகை கட்டணம் வசூலிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தற்காலிகமாக வஉசி பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இக்கடைகளுக்கான வாடகை கட்டணம் மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக ஒப்பந்ததாரர் வசூலிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, 3 மார்க்கெட்டிலும் ஒப்பந்ததாரர் வாடகை கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் பிப்.22-ம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகம் வாடகை வசூலிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, வஉசி பூ மார்க்கெட் உள்ளிட்ட 3 இடங்களில், மாநகராட்சி சார்பில் நீதிமன்ற உத்தரவு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி ஊழியர்கள் வாடகை வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை நேற்று அம்மாப்பேட்டை மண்டல உதவி ஆணையர் சண்முக வடிவேல் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவின்படி, 25-ம் தேதி இரவு 12 மணி முதல், மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள், உதவி வருவாய் அலுவலர், பில் கலெக்டர்கள் ஆகியோரைக் கொண்டு மாநகராட்சி நிர்வாகமே வாடகையை வசூலித்து வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, வியாபாரிகள், பொதுமக்களுக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் கடை வாடகை கட்டண வசூல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு தொடர்பான அறிவிப்பு பலகை மாநகராட்சி சாரபில் வைக்கப்பட்டது. இப்பணியை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முக வடிவேல் ஆய்வு செய்தார்.