

சேலம்-மேட்டூர் இடையே மின் பாதையுடன் கூடிய இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து அதிகமுள்ள ரயில் வழித்தடமாக சேலம்- மேட்டூர் வழித்தடம் உள்ளது. மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி உள்ளிட்டவை நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ரயில் மூலம் மேட்டூருக்கு கொண்டு வரப்பட்டு வந்தன. சரக்கு போக்குவரத்துக்கான தேவை அதிகரித்ததால், இவ்வழித்தடத்தை இரட்டைப் பாதையாகவும், மின் வழித்தடமாகவும் மாற்றும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது.
இதில், சேலம்- ஓமலூர், ஓமலூர்-மேட்டூர் என இரு பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வந்தன. இவற்றில், சேலம்-ஓமலூர் இடையே ரூ.115 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளன. ஓமலூர்-மேட்டூர் இடையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே, மேச்சேரி-மேட்டூர் அணை ரயில் நிலையம் வரை 12 கிமீ பாதை அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம்-மேட்டூர் இடையிலான மொத்த வழித்தடத்திலும் பிப்ரவரி இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் னிவாஸ் கூறும்போது, “ஓமலூர்- மேட்டூர் இடையில் பாதை அமைக்கும் பணி ரூ.232 கோடியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது, திட்டத்துக்கான செலவுத் தொகை சற்று கூடியுள்ளது. இப்பணியில் 16.5 கிமீ தூரம் பாதை அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 13 கிமீ தூரத்துக்கு பாதை அமைக்கும் பணி பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.