நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் ஜன. 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

நெல்லை உட்பட 4 மாவட்டங்களில்  ஜன. 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 31-ம் தேதி ஞாயிற்றுக்கி ழமை 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. முகாமின்போது, 1,35,537 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,221 மையங்கள் செயல்பட வுள்ளன.

நடமாடும் மருத்துவக் குழு மூலமாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வருபவர்களில் குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் அமைத்தும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளில் மொத்தம் 5,164 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்தப் பணிகளுக்கு 134 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கூறியிருப் பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 400 குழந்தைகளுக்கு, வரும் 31-ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1,236 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான பணியில் பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சியை சேர்ந்த 4,737 பணியாளர்கள் பணியில் உள்ளனர். சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 ஊர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தோட்டமலை, தச்சமலை ஆகிய மலை கிராமங்களுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு 1,642 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in