

மரக்காணம் அருகே கழுவேலி ஏரி புனரமைப்புப் பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்துதல்,கடல்நீர் உட்புகுதலை தடுத்து நன்னீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.
இந்த ஏரியை மேம்படுத்து வதன் மூலம் ஊரணி, வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், அனுமந்தை, கந்தாடு, கொள்ளிமேடு,திருக்கனூர், எம் புதுப்பாக் கம், நடுக்குப்பம், ஓமிப்பேர், சித்தனப்பாக்கம், நாணகல்மேடு, தேவனந்தல், காரட்டை, அடசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கழுவேலி ஏரி புனரமைப்புப் பணிகளை நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் பூமி பூஜை மூலம் தொடங்கி வைத்தார்.
கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம்சார்-ஆட்சியர் அனு, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கனகராஜ், மரக்காணம் வட்டாட்சியர் உஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.