Published : 26 Jan 2021 03:19 AM
Last Updated : 26 Jan 2021 03:19 AM

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக திருச்சியில் பிப்.25-ல் கருத்துக் கேட்புக் கூட்டம் கரூர், புதுக்கோட்டையில் பிப்.26-ல் நடைபெறுகிறது

திருச்சி

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக பிப்.25-ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதேபோல, கரூர், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகங்களில் பிப்.26-ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் கடலில் கலப்பதைத் தடுத்து, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருது நகர் ஆகிய மாவட்டங்களில் நிலத் தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வேளாண்மை மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு போதிய அளவில் பயன்படுத்தும் நோக்கிலும் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14,000 கோடியில் நிறைவேற்றப்படும் என்று முதல் வர் பழனிசாமி ஏற்கெனவே அறி வித்திருந்தார்.

இந்தத் திட்டத்தில் காவிரி கட்டளை முதல் குண்டாறு வரை 259 கி.மீ தொலைவுக்கு கால்வாய் வெட்டப்படவுள்ளது. இந்தப் பணிகள் 3 பகுதிகளாக நடைபெற உள்ளன. முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.450 கி.மீ தொலைவுக்கும், 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 108 கி.மீ தொலைவுக்கும், 3-ம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 33 கி.மீ தொலைவுக்கும் என பல்வேறு பிரிவுகளாக கால்வாய் வெட்டப்படவுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட் டங்களில் 1,320.33 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரையிலான பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர்- செயலர் சார்பில் இந்தத் திட்டத்துக்கான பொதுமக் கள் கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்த அறிவிப்பு நேற்று வெளி யிடப்பட்டுள்ளது.

அதில், “சென்னை சுற்றுச்சூழல்- வனத் துறை அரசு செயலர் அலுவலகம், சுற்றுச்சூழல்- வனம்- பருவநிலை மாறுபாடு அமைச்சகம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி மாவட்ட தொழில் மையம், திருவெறும்பூர், மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அம்மாபேட்டை, மாத்தூர், பாகனூர், அளுந்தூர், நாகமங்கலம், முடிகண்டம், தொரக்குடி, சூரியூர் ஆகிய கிராம ஊராட்சி அலுவலகங்கள், கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர்- செயலர் அலுவலகம், துவாக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு செயல்முறை சுருக்க அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை பொதுமக்கள் பார்வை யிட்டு, தங்களது ஆலோசனைகள், கருத்துகள், ஆட்சேபணைகளை 30 நாட்களுக்குள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர்- செயலருக்கு தெரிவிக்கலாம்.

மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்.25-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் பங்கேற்று வாய்மொழியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது.

திருச்சியைத் தொடர்ந்து, பிப்.26-ம் தேதி காலை 11 மணியளவில் கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகங்களிலும் இந்தத் திட்டத்துக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x