

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் தேசிய வாக்காளர் தினவிழா நடைபெற்றது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்று புதிய பாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும்கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வண்ண பலூன்களை அவர்கள் பறக்கவிட்டனர்.
புதிய பாலத்தின் பக்கவாட்டு சுவரில் கட்டப்பட்டிருந்த பதாகையில் மாணவ, மாணவியரும், பொதுமக்களும் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். தேர்தல் ஆணையம், கோபாலசமுத்திரம் கிராம உதயம் ஆகியவை இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஜி. கண்ணன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேசிய வாக்காளர்தினஉறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வாக்காளர் தினத்தையொட்டி கோலப்போட்டி நடத்தப்பட்டது.