

குப்பையில்லா மாநகரமாக சேலத்தை மாற்ற மாணவர்கள் தூய்மை தூதுவர்களாக செயல்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாநகராட்சி பகுதியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக நடைபயிற்சியின்போது குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி வாரம்தோறும் சனிக் கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சியுடன் இணைந்து குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சூரமங்கலம், அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணியில், 650 பேர் ஈடுபட்டு 685 கிலோ குப்பை கழிவுகளை சேகரித்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறும்போது, “சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்ற மாணவர்கள் தூய்மை தூதுவர் களாக செயல்பட வேண்டும். தூய்மைப் பணியில் மாணவர்கள் தங்களது பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களை ஈடுபடுத்தி ஊக்கமளிக்க வேண்டும்” என்றார்.
மேலும், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் உருவாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பணியை மேற்கொண்ட ஆணையர் ரவிச்சந்திரன், இப்பணியின்போது, விழிப்புணர்வு கேள்விகளுக்கு சரியான பதில்களை கூறிய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.