

கரூர் மாவட்டம் மணவாசியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூரை அடுத்த வெங்கமேடு குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால்(37). தனியார் வங்கி வேலைகளுக்கு ஆள் அனுப்பும் ஒப்பந்த முகவராக பணியாற்றி வருகிறார். இவர், லாலாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மணவாசி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனபால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, விபத்து நேரிட்ட பகுதியில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாயனூர் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜபூபாலன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட கணேசன்(35), சரவணன்(32), பாலன், கணபதி மற்றும் 20 பெண்கள் உள்ளிட்ட 54 பேர் மீது, சிறப்பு உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.